பஸ் நிலையம் மேம்படுத்தப்படும்: கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. உறுதி

கும்மிடிப்பூண்டி, மே 25 –

"கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்" என, எம்.எல்.ஏ. விஜயகுமார் உறுதியளித்தார்.

தொழில் நகரமான கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நிழற்கூரை இல்லை. பூட்டிக்கிடக்கும் பாலூட்டும் அறை, சிமெண்ட் கிடங்காக மாறிய நேரக் காப்பாளர் அறை, ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களின் பார்க்கிங் பகுதியாக பேருந்து நிலைய வளாகம் மாறியுள்ளது. இதனால், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் மோசமான நிலையில் உள்ளது.

தொடர் புகாரின்படி, கும்மிடிப்பூண்டி த.வெ.க. எம்.எல்.ஏ. விஜயகுமார் நேற்று பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். அங்கிருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதன்பின் அவர் கூறியதாவது:

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அருகே ஜி.என்.டி. சாலையில் உள்ள சாலையோர வியாபாரிகள், விரைவில் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு மாற்றப்படுவர். அதன் மூலம் போக்குவரத்து நெரிசலற்ற பஜார் பகுதி ஏற்படுத்தப்படும்.

பேருந்து நிலையத்தில் புதிதாக நிழற்கூரை அமைத்து, குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். நேரக் காப்பாளர் மற்றும் பாலூட்டும் அறைகள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

29 May 2026